Tuesday 8 December, 2009

சொக்கா... ஆயிரம் பொன்னாச்சே!!!




கைப்பேசியை(யும்) அணைத்தாயிற்று
பதினோராம் கோளொன்றில்
பாய் போட்டமர்ந்துவிட்ட தனிமை - இந்த
கவிதைக்காக.

ரசனையான புணர்தலை சாப்பிட்டு
கற்பழிப்பின் வலியை துப்புகிறது
போட்டிபோட்டு எழுதும் இயல்பிலாக் கவிதை.

சட்டென்று காலியாக்கப் பட்டிருக்கிறது
எப்போதும் நிறைந்திருக்கும் அட்சயக் குடமொன்று.

கசிந்து கொண்டேயிருக்கிறது வெறுமை
காகிதம் முழுதும்.
எந்த வார்த்தை எடுத்தடைக்க?  - என்ற யோசனையில்
மூழ்கிப் போய்விட்டேன் நான்.

எப்போதும் கொஞ்சி கிடந்த என் மொழி
கெஞ்சிய பின்னும் பாராமுகம் காட்டுகிறது
அப்படியே அவளை போல!

சிந்தனை தூண்டிலில்
செருகப்பட்டிருக்கிறது  காலப்புழுக்கள்.
நாள் முழுதும் காத்திருந்தும் 
காலிக் கூடையுடன்தான் திரும்புகிறேன் வீட்டிற்கு.

ஒரு நினைவின் மூலத்தை 
திருடிக் கொண்டோடிய மற்றொன்று
உலர்ந்தே போய்விட்டது
அடுத்து வந்த சூன்ய கணத்தின் சூட்டில்!

காலமும் மூளையும்
வெடிப்புகளிட்டு வானம் பார்க்க,
பேனா மையும் வரண்டுவிட்டது...
எதுவும் எழுதாமலே.

எப்போதும் எழுதித் தீர்க்கும்
எல்லாக் கருவையும் கலைத்துப் போட்டு
அவள் நினைவுகளில் கூட,
ஆசுவாசிக்க அமராமல்...
பரிசுத்தொகை பதினைந்து நூறுகளில்
முட்டி மோதி மூர்ச்சையாகிப் போனதென் முயற்சி !!!


(உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக)

Monday 30 November, 2009

காதல் !!!


 
பொட்டல் காட்டு
மொட்டை பனைமரமாய்,
நான்!

நிழல் தேடி
ஒதுங்கிய  மைனா,
நீ!

நீ
பறந்து போன
பின்னும்,
காதல் செய்ய...

பத்திரமாய்
பாதுகாக்கிறேன்
நீ
விட்டுச்சென்ற
ஒற்றை சிறகை!!!

வெள்ளைத்தோல்காரி !!!



தூங்கும் போதும்
குழந்தை சிரிப்பு,
கூந்தல் கோதும்
தன்னிச்சை விரல்கள்,
குறு குறு கண்கள்,
உதட்டு சுழிப்பு,
குறும்பு சேட்டை,

எப்படி அடையாளம் சொல்ல?

எல்லா
பேருந்து பயணத்திலும்
வந்து போகிறாள்
ஒரு
வெள்ளைத்தோல்காரி
அப்படியே
உன் நகலாய்!

நீயும்
ஞாபகப் "படுத்திக்"கொண்டுதான் 
இருப்பாய்,
எங்காவது...
எவனுக்காவது...
எவளையாவது...

Thursday 8 October, 2009

ஒரு நாள் ஒரு கனவு


அழகானதொரு
கனவு அது!
கனவில்,
கனவுகளின் தொல்லையின்றி
நிம்மதியாய்
ஒரு தூக்கம்...

உன்
மடியில்!

நீங்களே சொல்லுங்க...


விவாதங்கள் அழகானவை... "நான்" என்ற அகந்தை கொஞ்சம், இறந்த காலம் கொடுத்த "அறிவு" கொஞ்சம்,... எல்லாம் தாண்டி நம் வார்த்தைகளில் கவனம் குவிக்கும் செவிகள் கிடைத்த உற்சாகத்தில், விவா.....திப்பது இயல்பாகவே அலாதியானது.சாதாரண வார்த்தைகளை விட, "விவாதங்களின்" வார்த்தைகள், காற்றலைகளில் சற்று அதிகமாகவே அதிர்வினை ஏற்ப்படுத்துகின்றன. 

 சில வாரங்களுக்கு முன்  ஆனந்த விகடனில் வெளியான, ஒன்,டூ,த்ரீ... என்ற கவிதையினை (நண்பர் கிருஷ்ண குமார் எழுதியது) ரசித்துவிட்டு சுகுமாரையும் வாசிக்க சொன்னேன். கவிதையை வாசித்த மாத்திரமே சலனமே இல்லாமல் கேட்டான், "என்ன இருக்கு இந்த்த கவிதையில்?" என்று. என்ன இருக்கணும் ? என்று கேட்டேன் நான்.

 "கேள்வி கேட்டா சொல்லணும், திருப்பி கேள்வியே கேட்க கூடாது" என்றான். பதில் தெரிஞ்சுகிட்டே கேள்வி கேட்டா?, இதற்கான பதில் உனக்கே தெரியும் -னு தெரிய வைக்கிறதுக்காகத்தான் பதில் கேள்வி என்று சொல்லி... அந்த கவிதை, "உணர்வை தொடுவதாய்" இருப்பதை சொன்னேன். தொடர்ந்த வார்த்தை பரிமாறல்களுக்கு பிறகு, கடைசியாய்.... "கவிதை என்றால் செய்தி இருக்கணும்" என்றான். அதோடு நிறுத்தாமல் கவிதை என்ற பெயரில் நான் எழுதும் பதிப்புகளில் "புலம்பல்தான்" இருப்பதாய் சொன்னான்.

அவனுடைய பார்வையில் என் புலம்பல்கள், கவிதையாய் தெரியாததாய் சொன்னான்(நான் எதை எழுதினாலும், வேறு வழியின்றி படிக்கும் முதல் வாசகன் ).அவனிடம் இருந்தது நான் படிப்பதற்காய் வாங்கியிருந்த "பெயல் மணக்கும் பொழுது " - ஐ (பெயல் மணக்கும் பொழுது - ஈழப் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு) சுட்டிக் காட்டி, அவைகளும் புலம்பல் தானே என்றேன். "அந்த புலம்பல் வேற, உன் புலம்பல் வேற" என்றான். அதெப்படி வெவ்வேறாகும் என்று கேட்டதற்கு... அவர்களின் எழுத்துகள் அடுத்த மனிதர்களின் வலியை பேசுவதையும், எனது எழுத்து முற்றிலுமான "சுய" புலம்பல் என்பதையும் சொல்லி முடித்தான்.

இதற்கு முன்பே ஒரு முறை, "வலியின் பிடியினில்தான் நல்ல படைப்புகள் நல்ல படைப்புகள் தோன்றும்" என்று நானும்... "வலியில் இருக்கும் போது படைப்புகள் வராதென்று" சுகுமாரும் பேசியிருந்ததிலேயே மீண்டும் வந்து நின்றோம்.இந்த முறை அவனது வாதம் இன்னும் அழுத்தமாய் விழுந்தது.

 " எதையாவது எழுதீட்டு வலியில் எழுதுனேன் னு சொல்றதும், எழுதவே முடியாத அளவுக்கு வலில இருக்குறதும் வேற" னு சொன்னான். அதை அதிகமாகவே ரசித்தாலும்.... விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.....




நீங்க சொல்லுங்க ....
ஒரு கவிதையில் என்ன இருக்கணும் ?


வலியின் பிடியினில்தான் நல்ல படைப்புகள் தோன்றும்" என்று நானும்... "வலியில் இருக்கும் போது படைப்புகள் வராதென்று" சுகுமாரும் கூறுவதில்

உங்கள் கருத்து என்ன ?

Saturday 19 September, 2009

வெள்ளைத்தாள்!

தினசரி கனவுகளில்
படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைத்தாள்!
வெறிச்சோடிய
தெருவின் நிசப்தத்தை
சுமந்த படி, 
வாடிக்கையாளன் தேடும் 
விபச்சாரியின் கண்களோடு, 
கால் தடங்கல் ஏதுமில்லா 
கடற்கரை மணல் போல... 

நானோ
எழுதும் பொருள்
தேடிக் களைத்து
பேனாவை மூடிவிட்டு  
அடுத்த நாள்
கனவுக்காய், 
பாதுகாக்கிறேன் 
என் வெள்ளைத்தாளை!

தேடிக்கொண்டிருக்கிறேன்...




வழியறியா காட்டிலிருந்து
அள்ளி எடுத்து,
அரவணைத்து,
பாலைவன சுழியில்
தள்ளி
பறந்து போனாய்!
தண்ணீர் தேட மறந்தது,
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்!

சன்னலோரம்...




தத்தம்
குழைந்தகளின் 
அழுகையை நிறுத்த, 
பேருந்தின் சன்னல் வழி, 
எதை எதையோ  
காட்டிக்கொண்டிருக்கிரர்கள் 
பெற்றோர்கள்!  
நானோ... 
என் மனதின் 
விசும்பலை நிறுத்த, 
உன்னை காட்டிக்கொண்டிருக்கிறேன்  
என் ஒவ்வொரு  
பயணத்திலும்!

Tuesday 8 September, 2009

கனவில் தொலைத்தது...



தொலைந்ததா
தொலைத்ததா
என்பது மறந்து,
தேடிக்கொண்டிருப்பதில்தான்
மகிழ்ச்சி!
கனவில் தொலைந்த
உன் புகைப்படத்தையும்,
கனவாய்
தொலைந்த உன்னையும்!

Thursday 3 September, 2009

எங்கள் கவலையெல்லாம்.......




நெடுஞ்சாலை முட்புதராய்
புறக்கணிக்கப்பட்ட
வாழ்க்கையில்,
எதேச்சையாய் நேரும்
காயப்படுத்துதலில்தான்
கிடைக்கப் பெறுகிறது
கவனம் !!!
மலர்ச்செடியாய்
இல்லாது போன
கவலையை தாண்டி,
முட்கள்
தானாய் சென்று
காயப்படுத்தாதெனும்
உண்மையையும் தாண்டி,
மலர்செடியாய்
இருந்து இருந்தால்,
தவிர்க்கப்பட்டிருக்கும்
காயங்கள்
எண்ணியே
எங்கள் கவலையெல்லாம்...!!!

Tuesday 25 August, 2009

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!!!




இலவசமாய்
வாங்கி வந்த,
வாழ்க்கையில்...
கடன்பட்டே கழிகின்றன,
கணங்கள்....

சுயம்
இழந்து, பிண்டமாய்...
சூன்யம்
தொட்டுத் திரும்பி,
பிணமாய்
சாத்தப் பட்டிருக்கிறது
மனம்!

பணமென்றும்
பொருளென்றும்
உறவென்றும்
உயிரென்றும் - தினசரி
வயிரென்றும்
வளருது இலக்கு!

இலக்கணம்
மீறிய
புதுக்கவிதை,
இவன்தன்
இலக்கடையும்
வழியை - நீ
விளக்கு!!!

கனல் எரியும்
கண்களோடு,
தணல் தகிக்கும்
புனலாய் மாறி,
நின்னை
சரணடைந்தேன்
கண்ணம்மா!

எனை
மீண்டும்,
அக்கினி குஞ்சொன்றாய்
செய்யம்மா!!!

இன்னும் ஒரு கேள்வி...





உன் நினைவுகள் - என்பது

எப்போதும்....
உன்னைப் பற்றி,
எனக்கு
தோன்றும் நினைவுகளா?

நான்
இல்லாது போன,
உன்னில்
எழும்
எண்ணங்களா???

Friday 24 July, 2009

முகமூடிகள்!!!!!




முகமூடிகளால்
ஆகிப் போனது
இந்த
வாழ்க்கை!

அசட்டு சிரிப்புகளில்
தொடங்கி,
அழுகாச்சி வரை
வித விதமாய்
கழட்டி,
மாட்டி கொள்கிறார்கள்
முகமூடிகளை!!

சுட்டாலும்
வெண்மை தரும்
சங்குகளில்
செய்யப்பட்டிருக்கிறது
முகமூடிகள்!
முகங்களை
முற்றிலுமாய்
மறைப்பதற்காய்....

நிஜமான
முகங்கள்
தூரப்பட்டாயிற்று!
அதன்
பிம்பங்களை
பார்த்திராது
போயின....
எம்
கண்ணாடிகள்!

எல்லோருக்கும்
பிடிக்கும் படியான,
முகமூடியொன்று,
செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது!
எனக்காக....

அதுவரை
என்
முகத்தை, நீங்கள்
தாராளமாய்
வெறுக்கலாம்!!!

Saturday 18 July, 2009

பிள்ளை மனம்!




நாட்களுக்கு
பின்னாள்
ஒளிந்து கொண்டு,
எட்டித்
தலை காட்டுகிறது
உன் ஞாபகங்கள்!

மழலை
கிறுக்கலாய்
திருத்தங்களுக்கு
அப்பாற்பட்டு,
சிலேட்டை நிறைக்கிறது
நீ
கொடுத்து,
எடுத்து சென்ற
காதல்....

நிகழ்கால நிஜத்தை
ஒவ்வொரு முறையும்,
புத்திக்கு ஊட்ட....
பின்னாலேயே
திரியவிடுகிறது,
நீ களவாடிய
என் சுயம்!

சிற்றெறும்பாய், நீ
கடித்து சென்ற
இடத்தை
சொல்ல தெரியாமல்,
கால் பரத்தி,
கை விரித்து....
விசும்பி அழுகிறது
என்
பிள்ளை மனம்!

Monday 13 July, 2009

சுகுமார் சொல்......



எல்லாப் பொழுதுகளிலும் ஏதேனும் இவ்வாறு கிடைத்துக்கொண்டே இருக்கும் உன்னிடம், அசைபோட. இன்று, இது எனக்கானதாய் மிக நேரடியாக கிடைத்ததில் சற்று சலனம்தான் அடி மனதில்.

உன்னை போல் நேர்த்தியாய் எழுத இனிமேலாவது முயற்சிக்கிறேன். உனது படைப்பொன்று எனது blog - இல் ஒதுங்கியதில், சற்றே கணம் கூடியது இந்த தளத்திற்கு. நன்றி...

கவிதைக்கும், என் மேல் எடுத்துக்கொள்ளும் கவனத்திற்கும்.

--------------------------------
நீங்களில் இருக்கிற நான்
நாங்களில் இருந்து எழுதிக்கொள்வது ........

ஒரு மழை நாளில்
பிரியம் என்றாய். காதல் என்றாய்.
விளங்க முடியா கவிதை என்றாய்.
இன்னொரு மழை நாளில்
தோல்வி என்றாய். காயம் என்றாய்.
மீளாத்துயரம் என்றாய்.

நண்பா- பதிலென்று உனக்கு எதைச் சொல்ல?

யுத்த நாளுண்டு. அதற்க்கு மறுநாளுண்டு.
மழை நாளென்று எதுவும் நினைவில் இல்லை.
இருப்பதும் இல்லாதிருப்பதுமே
வெற்றியும் தோல்வியும்.
"மீளாத்துயரமென்று எதுவும் இல்லை
மீளாதிருத்தலே துயரம்!"

குறுக்கும் நெடுக்குமாக
எல்லாத்திசைகளையும் தொட்டு திரும்புகின்றன
உங்கள் காலக்கோடுகள்
ஆரம்பமும் முடிவும் தெரியாமல்
வட்டப்பாதையில் சுற்றுகின்றன
எங்கள் யுத்த கோடுகள்
உங்கள் பூமியை போல.

சுதந்திரம் என்பது ஒற்றைத்தூரிகை
நீங்கள் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்!!!

- சுகுமார்

Wednesday 1 July, 2009

இருளும், இருள் சார்ந்த எண்ணங்களும்....




இருட்டு கறுப்பை குறிப்பதாய் தெரிவதில்லை. இருள் நிறத்தோடு ஒப்பிட முடியாததாய் தனித்து நிற்கிறது. மங்கலான வெவ்வேறு நிற வெளிச்சங்கலோடும் இருட்டு முகம் காட்டுகின்றது.என்னதான் வெளிச்சம் இருட்டுக்கொரு விடையாய் வந்தாலும், மௌனம் பேசும் இருட்டு எந்த கேள்வியையும் கேட்டதை தெரியவில்லை.

சிறு வயதில், இருள் பயத்தை தவிர வேறு எதையும் பெரிதாய் தந்ததில்லை. அனால் இப்போது இருட்டு எண்ணங்களை வாரி வாரி வழங்கும் அட்சயபாத்திரமாய் படுகிறது. மெழுகுவர்த்தி துணையோடு மௌனம் பேசி அழுது உருகி கிடப்பது எனக்கு பிடித்த விசயமாய் ஆனாலும், அந்த வெளிச்சமும் தீர்ந்த பின் கிடைக்கும் சூன்யம் இன்னும் அலாதி இன்பம் தருகிறது.எல்லாம் இருண்டு போன, கனத்த மன ஓட்டங்களின் அலசலில்தான் "சுயம்" தட்டுப்படுகிறது.இப்படி அகத்தை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு, புறத்தை இருட்டிக்கொள்கிறது இருள்.

இருட்டிற்கென்று எப்படி முகம் கிடையாதோ, அதே போல் இருட்டில் உங்களுக்கும் முகம் கிடையாது. இருட்டை தனிமையில் ரசிப்பதும், துணையோடு ரசிப்பதும், கூட்டத்தோடு ரசிப்பதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனிமையிலும், துணையுடனும் ரசிக்கும் இருட்டின் அழகை "நிசப்தம்" அலங்கரிக்கிறது. கூட்டத்தோடு நோக்கும்போது "சத்தம்" அழகு சேர்க்கிறது. குரல்கள் முகங்களை மாறும் வித்யாசமான நேரம் அது.

இருட்டிற்கென எல்லைகள் இல்லாமல் போனாலும், வெளிச்சத்தின் துவக்கத்தில் முடிந்து போகிறது இருள். இருட்டு மின்சாரம் சார்ந்ததாய் உணரப்பட்டாலும், இருள் நிரந்தரமானது. இயற்க்கை சார்ந்த நாட்களும், நாட்கள் சார்ந்த இரவுகளும், இரவுகள் சார்ந்த இருளும் நிரந்தரமானது. பகல் நேரங்களில் கூட மூடிக்கிடக்கும் பெட்டிகள் துவங்கி அறியாமை சூழ்ந்த மனங்கள் வரை, இருள் நிரந்தரமாய் அடைகாக்கபடுகிறது.



இருட்டில் எனக்கு பரிச்சயமான முகங்களை மனத்திரையில் ஓடவிட்டு பார்ப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஒரே முகத்தின் பல பாவனைகளை இருட்டு திரையிட்டு காட்டும். சிறு வயதில் இருந்தே பற்பல முறை இருட்டும், இருட்டில் உணரப்பட்ட இயலாமையும் தவிர வெரேதும்... பார்வையற்றோரை பற்றிய எண்ணங்களை எழுப்பியதில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருள் வெளிச்சத்தை தாண்டிய ஆழமான எண்ணங்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. "தாகம் தீர்ந்த பின் யாரு தண்ணிரை பற்றி நினைப்பதில்லை". வெளிச்சம் கொடுக்கும் சுதந்திரம் எண்ணங்களை கட்டிப்போட்டு விடுகிறது.

இருட்டு மௌனத்தை குறிக்கிறது. குரல்களில் அடையாளம் தேடுகிறது. அறியாமையின் பிரதிபலிப்பாயும், இயலாமையின் எடுத்துக்காட்டையும் இருக்கிறது.வெளிச்சம் இலேசானதாகவும், இருள் எடை கூடியும் உணரப்படுகிறது.இருட்டு உன் பிரிவையும், பிரிவின் வலியையும் கூட குறிக்கிறது. இப்போதெல்லாம் வெளிச்சத்தை விட இருளுக்காய் மனம் ஏங்குகிறது.

Sunday 14 June, 2009

காதல் தோல்வி!!!




திருமணத்திற்கு
முன்பே
விவாகரத்தானவன்
நான்!
ஜனனத்திற்கு முன்
மரணம் கண்ட
சிசு போல!

ஆனால்,
வாழ்ந்தது உண்மை!

காதல் தோல்வி
என
கல்லெறியும் எவருக்கும்,
போட்டி நடந்ததெப்போதென்று...
புத்திக்கு
உரைத்துள்ளதா?

முடிவில்தானே
தெரிய வரும்
தோல்வி
வெற்றி
அனைத்துமே?
முடிவுறாத
காதலுக்கு,
முடிவெழுதிய,
நடுவர் யார்?

தன்
சிசுவினையே
கொன்று வாழும்
உயிர்கள்
இங்கு உண்டு!
தன்
நினைவுகளை
தின்று வாழும்
நெஞ்சம்
பார்த்ததுண்டா?

உறவு
புரிதலுக்காய்,
காதல் கொள்ளும்
கடியோர்தம் எதிரினில்,
பிரிதலினில்
முழுமை கொண்ட
பெரும் காதல்
என்னது!

இன்று மட்டும் விடிய வேண்டாம்!!!!!!!!



பின்னங்கழுத்தில்
கை வைத்து
நெட்டி
வெளியே தள்ளியபடி
இழுத்து மூடிக்கொண்டது,
நிஜ வாழ்க்கையின்
இரும்புக்கதவுகள்!

விரிந்து கிடந்த
கனவு சாலையில்,
வைரங்கள் பொறுக்கி...
பூந்தோட்டங்கள் கடந்து...
இறக்கை பொறுத்தி பறந்து...
மழலையுடன் விளையாடி...
பொற்கிரீடம் சூடி...
எதிர்பட்ட சிம்மாசனம் நோக்கி,
ஓய்வெடுக்க நடக்கையில்....

என்
சிரித்த முகம்
காண சகிக்காமல்,
படாரென கை விரித்து
என்னை
உள்வாங்கிக்கொண்டு
அகோரமாய் சிரிக்கிறது
இந்த
நிஜ வாழ்க்கை!!!!!

ஒவ்வொரு காலையிலும்...

Saturday 30 May, 2009

வறண்ட மனங்களின் கிசுகிசுப்பு!






ஏப்ரல் மாதத்து
குழாயடியில்
காலி குடங்களின்
மாநாடு!

நிரம்பி கிடப்பதோ,
காலியாய் இருப்பதோ
நிரந்தரமில்லை - என
நிதர்சனமான பின்பும் ......

நடுநிசி மழையில்,
நனைந்து
நிரம்பி
தழும்பிய நாட்களைத்தான்
நினைவுகூர
தவிக்கிறது
வறண்ட மனம்!!!!

அவ்வாறே நானும்....

இமையசைப்பு




உன்
இமையசைப்பில்,
நடந்த
இசையமைப்புகளில்
சிக்கிக்கொண்டு
வியர்த்தும்
விழித்தும்
நகர்கின்றன என்
செவிட்டு இரவுகள்!

Monday 20 April, 2009

நான், நீ, மழை!!!





என்
கனத்துப்போன
வாழ்க்கையை,
எதிரொலித்து...
மௌனம் பேசுகிறது
இந்த
கறுத்துப்போன மேகம்!

அவள்
நினைவுகளின் வருடலில்,
சிதறிய
வார்த்தைகளாய்,
முனக துவங்கியது
தூரல்!

இப்போது...
உச்ச ஸ்தாயில்,
சேராத ஸ்ருதியில்,
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு
மழைப்பாடல்!

இது
என் உயிரின்
ஒப்பாரியா?
உன் ஞாபக
கச்சேரியா? - என
அலசிப்பார்க்க
அனுமதிக்காமல்...

மயக்கியே
போய்விட்டது....
உன்
மூச்சுக்காற்றாய்
சில்லிட்ட
சாரல்!

Tuesday 14 April, 2009

நான் அறிந்திருக்கவில்லை நீ இல்லாமல் போகும் எதிர்காலம் ஒன்றுண்டென்பதை!




உன்
பிரிவின் மிச்சமாய்,
எஞ்சியிருப்பது....
இந்த
கவிதையும், இருதுளி
கண்ணீரும்!

மனதோ
நிரந்தர ஈழமாய்,
உன் நினைவோ
உயிரினில் ஆழமாய்
மாரிப்போனதேன் வாழ்க்கை?

கடைசியாய்....
உன்
கழுத்தோடு கை வளைத்து,
காதுமடல் கடித்த
கணங்களில்,
நான் அறிந்திருக்கவில்லை
நீ
இல்லாமல் போகும்
எதிர்காலம்
ஒன்றுண்டென்பதை!

நானும்
நீயும்
சேர்ந்து கால் பதித்த
கடற்கரைக்கு,
நமது
கால் தடங்களை
மட்டும்
பத்திரமாய் காப்பாற்ற
கட்டளையிட்டோம்!


எத்தனையோமுறை
நீ
என்னை பார்த்து
குரைத்த பொழுதுகளில் கூட,
காதல்
மறந்ததில்லை
உன்
கண்கள்!

நீ
ஈரப்படுத்திய என்
கன்னங்களை
இன்று...
உன்
நினைவுகள் ஈரப்படுத்துகின்றன!


நான்கு பேர்
அமர ஏதுவான
பெஞ்சில்,
நாமிருவராய்
அமர்ந்த போதும் ...
உடலுரசி ,
என் மடியினில்
உன் தலை கொடுத்து
ஒய்வு கொண்ட பொழுதுகளில் ....
நம்
ஐந்து வருட
சிநேகமேனும்
ஓடுடைத்து
காதல் பொரிந்தது!

ரோசி...

எங்கள் வீட்டு
செல்ல
நாய் குட்டியே.....
காணாமல் போன
உன்னோடு
சேர்த்து
என்
வாழ்க்கையையும்
தேடி கொண்டிருக்கிறேன்!

Monday 13 April, 2009

இன்று இவ்வாறு தோன்றுகிறது....





இந்த வெறுமையான நாட்கள் என்னை எவ்வளவோ யோசிக்க வைக்கிறது...

என்னையே சற்று தள்ளி நின்று பார்த்து நிதானிக்க முடிகிறது. இதற்காக பலருக்கு நன்றி சொல்ல வேண்டும்...

சோளிங்கநல்லூர் அறை நிறைய வாசிக்கவும் அதை விட அதிகமாய் யோசிக்கவும் வைக்கிறது. இனி எல்லாம் சிறப்பாய் இருக்கும் என நம்பிக்கை வருகிறது...
இவ்வாறெல்லாம் எழுத தூண்டியதற்கு சுகுமாருக்கு நன்றி..

( ஏன்டா இவ்வளவு கேவலமா கண்டபடி கிறுக்குற - ன்னு சுகு நிச்சயம் திட்டமாட்டன். ஆனா அத புரிய வைக்கிற மாதிரி நிச்சயம் ஏதாவது சொல்வான்.)

இன்னும் நமக்கென்று ஆற அமர உட்கார்ந்து blog-a அலுவலகம் ஏதும் இல்லாததால் இவ்வாறு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்த வரை மனதை பதிவு செய்து விட முடிவு செய்தாயிற்று!

இப்போதெல்லாம் எந்த உறவுகளும் வேணாம்னு தோணுது... ஆனா சுகு அத சொல்லும்போது மட்டும் ஏத்துக்க முடியல,.

ஏ சி போட்ட காருக்குள் பேசன் பத்திரிக்கை வாசிக்கும் ஏழு வயது வெள்ளை தோல் குழந்தையும், பிட்சைக்கார அம்மாவின் கையை பற்றிக்கொண்டு தம்பியை இடுப்பில் சொருகி கொண்டு அம்மாவின் கையில் சேர்ந்த சில்லறையை கணக்கு பார்க்கும் கருப்பு குழந்தையும் ஒரே ரோட்டில்....

என் வாழ்க்கையும் இதில் ஏதோ ஒரு இடைப்பட்ட புள்ளியில் நகர்கிறது...


நடிகர்கள் சிக்ஸ் பேக்! ஈழப் பிரச்னை! சத்யம் மோசடி! தேர்தல்!அசிங்கமான அரசியல்! வேலைவாய்ப்பு!எதிர்காலம்! அயன்! ஆனந்த தாண்டவம் - னு எல்லாம் பேசிவிட்டு .... குடித்த டீ க்கு யார் பணம் குடுக்க போகிறார்கள் என்ற கேள்வியை மனதிலும் விரல்களை பாக்கெட்டிலும் விடும் சராசரி வாழ்கையை தாண்டி ....

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது...
செய்வேன் என்ற நம்பிக்கையில் இவ்வாறு கிறுக்கும்போது .... நாளை செய்த பின் இதை படிப்பது நன்றாக இருக்கும் என எண்ணமுடிகிறது!

நீ மட்டுமே எல்லாமாய்.....




எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஒரு நாளில் செல்வா சுகுமாருக்கு அனுப்பிய குறுந்தகவலில் இந்த வரிகளுக்கான கருவை அனுப்பி அதை எதாவது செய்ய முடியுமா? என்று கேட்க அதை சுகு என்னை முயற்சிக்க சொன்னான்.

அவன் எழுத்துக்கு இதுவெல்லாம் சுண்டைக்காய்.... நல்ல படைப்பென்று அவன் கருதாத எதையும் அவன் படைப்பதே இல்லை.

நமக்கு அவ்வாரெல்லாம் வரைமுறை இல்லாததால் அவன் அனுப்பிய கரு வார்த்தைகளையே ஒன்றுக்கு கீழ் ஒன்றாய் முயன்று... இவ்வாறு கொடுத்தாயிற்று.....

என்னால்
இழக்க முடிந்த
ஒரே விசயமாய்
நீ
ஆன பின்பு,
எனக்கு கிடைத்த
ஒரே விசயமாயும்
நீதான் இருக்க முடியும்!



நீ
நான்
பெற்றிருக்கவே முடியாமல்
பெற்ற
ஒரே ஒன்று!
அதே போல்தான்
நான்
இழக்கவே விரும்பாமல்
இழந்துவிட்ட
ஒரே ஒன்று!



என்னால்
உன்னை மட்டுமே
பெற முடித்து!
அதனால்,
இழந்தாலும் - அது
உன்னை மட்டும்தான்!



எல்லோரையும்
தீண்டி செல்லும்
ஜனனம், மரணம் போல
எனக்கென்று
கிடைத்த ஒரே
" எல்லாம் " நீ !
ஆகவே
என்
எல்லா இழப்புமாய்
" ஒன்றாய் " நீ!

உன் நினைவுகள்...












நுரை தள்ளும்
மாடாய்,
நடக்கிறேன்...
உன்
நினைவெனும்
பொதி சுமந்து!


இறக்கி வைக்க
மனமும் இல்லை!
சென்று சேர்க்க
வழியும் இல்லை!


தினமும்
முனகிக்கொண்டே
கண் விழிக்கிறேன்...
உன்
சாட்டையடி ரணங்களுடன்!!!

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

ஜே ஜே குறிப்புகளில் இருந்து ......

நான் என் நாட்குறிப்பில் எழுதிய ஒவ்வொரு சத்தத்தையும் அப்படியே எதிரொலிப்பதை வியந்து கொண்டே இருக்கிறேன் ....




"நிம்மதி என்பது துளி கூட இல்லை. எப்போதும் ஒரு மனக்கலவரம். பிறரால் ஒதுக்க படுகிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறது. யாருக்குமே என்னை பிடிக்கவில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது.முறுக்கபடும் நூல்கள் போன்றவை என் உறவுகள்.முதலில் தளர்ச்சி, தொய்வு, அதன் பின் வலு, அழகு, இறுக்கம். மேலும் முறுக்கத்துக்கு ஆளாகின்றன. இப்போது அறுபட்டு போய் விடுகின்றன. வலுவின் உச்சகட்டத்தில் முருக்கேற்றுதல் நிறுத்தப்பட வேண்டும்.அந்த நிமிஷம் எனக்கு தெரிவதில்லை."






இது எல்லோருக்கும் ஏற்படுகிற மனநிலை என புரிகிறது. சுகுமார் இந்த புத்தகத்தையே புறக்கணித்து விட்டான். சதீஷ் என்னை இந்த புத்தகத்தை படிப்பதை நிறுத்த சொல்கிறான். எனக்கு ஜே ஜே வார்த்தைகள் பிடித்திருக்கிறது அப்படியே அவளை பிடித்ததை போல.





"மனம் ஓயாமல் தத்தளித்து கொண்டே இருக்கிறது. உள்ளுர இனந்தெரியாத பாரம். அருமையான பல உறவுகள். அனேகமாக எல்லாம் புளித்து போய் விட்டன. என்னிடம் குறைகள் இல்லை என்று நான் எண்ணவில்லை.ஆனால் எனக்கு எட்டிய வரையில், என்னை விசாரணை செய்து கொண்டே இருக்கிறேன். என் உண்மை உணர்ச்சியும் பார்வையும் தான் எனக்கு எதிராக ஒரு வளையத்தை உருவாக்குகிறது."







எவ்வாறு இவ்வளவு சரியாக என் உணர்வுகளை (நம் உணர்வுகளாக கூட இருக்கலாம்) இவரால் 50 வருடங்களுக்கு முன்னையே பதிவு செய்ய முடிந்தது?


என்னதான் இருந்தாலும் உள்ளுக்குள் யாரோ ஒருவர் (அவளாய் கூட இருக்கலாம் ) என் வார்த்தைகளை எனக்கே சொல்கிறார்கள்.
வாழ்க்கை மிகவும் நீளமானது.இது மகிழ்ச்சியால் மட்டுமே நிரம்பி இருக்க வேண்டும், அது நம்மால் முடியும்.


நானாய் போன நான்!


உங்கள் எல்லோரையும் போல் போட்டோவுக்கான செயற்கை சிரிப்போடு, இருக்கும் நான் தாமோதரன் ......





உங்களோடு இப்போது blog - a நான் பிறந்த நாள் 10.03.1985...