Wednesday 11 January 2012

வாசிப்பு!
அகம் முழுக்க 
அடர்த்தியாய் இருள்!
புழுக்கம் குறைக்க 
புத்தகம் திறக்கிறது 
மனது!

கால நெரிசலில் 
களவு கொடுத்த 
நித்திரை எல்லாம் 
மீட்டு கொடுக்கும்  ஒரே 
மாத்திரை !

குறியீட்டை ஒலியாய்,
எழுத்துகளை அர்த்தமாய்,
சிந்தைக்கு ஊட்டும் 
விந்தை! 

மூளைசுவர்களில்
திரையோவியம் 
கொட்டிவிட்டு போன 
சாயம் நீக்கும் மாயம் !

ஆட்களை  படித்தேன் 
குழப்பம் வந்தது! 
நூல்களை  படித்தேன் 
தெளிவு தந்தது!

பார்வையற்ற தோழரெல்லாம் 
பத்து விரலில் படிக்கிறார்!
பணமற்ற தோழர்கள்தாம் 
படிப்பறிவின்றி துடிக்கிறார்!

யாம் கொண்ட அச்சமெல்லாம் 
குறுஞ்செய்தி தாண்டி
வேறேதும் வாசித்தறியா 
எம் இளைய 
தலைமுறை பற்றியே! 

Tuesday 10 January 2012

பால்யம்


உடைந்து போன 
பலூனில்
விடாது 
வழிகிறது கண்ணீர்! 

திண்டுக்கல்லில் இருந்து 
திருச்சி வழியாக 
மதுரை பயணிக்கிறது
எங்கள் 
வீட்டு நிலைக்கதவு!
விலை"மதிப்பற்ற" பயணசீட்டுகளை 
கொடுத்த படி . 

பிரம்படி கனவுகளில்
நெடுந்தூக்கம் கேட்கிறது
மதிப்பெண் வரும் நாட்கள்! 

ஓட்டைப்பையில் 
வழிய விட்ட 
சில்லறையில் சிக்கிகொண்டது 
தவறிப்போன 
தின்பண்டம்.

நினைவுச்சாலைகளை
பால்யம் 
கடக்கும் போதெல்லாம் 
உதட்டோரத்தில் இளைப்பாற 
அமர்கிறது 
நிற்காது அலைகின்ற
புன்னகை! 

Saturday 7 January 2012

இசைக்கருவி மீட்டல்!அறுபத்தி நாலு கலையில்
ஒன்றாம்!
அரசனானாலும் அதை
பயில்தல் நன்றாம்! 

கலவி இன்பத்தில் 
காணும் சுகமெல்லாம் 
சலிக்கும்.
சலிக்காது (இசைக்)
கருவி மீட்டலில் 
காணும் சுகம். 

கண்ணீர் துடைக்க,
கவலை துறக்க,
களைப்பை மறக்க,
மனக்களிப்பை உரைக்க...
என் முன்னவன் கையில் எடுத்ததெல்லாம்,
பம்பை, உடுக்கை, உறுமி மேளமும்
குழல் முழவு சிறுபறை தாளமும் தான். 

சரஸ்வதி கையில் வீணை கொடுத்தோம் 
சிவனின் சூலத்தில் உடுக்கை இணைத்தோம் 
அரியின் கையில் குழலை திணித்தோம் 
எம் கடவுளர்க்கும் இசையை மறவாது பயிர்த்தோம்! 

எதேனும் கொடுங்கள் 
உங்கள் குழந்தை கையில்!
கிட்டார், ட்ரம்ஸ், கி-போர்டு என்று...
அவர்கள் இசையின் சூழலில்  வளர்தலே நன்று !

Friday 6 January 2012

தாழிடப்படாத மாயக்கதவுகள்!
கதவுகளை புறக்கணியுங்கள் 
திருட்டுகள்  குறையலாம்!

நன்னெறி காக்கும் 
முயற்சியில், 
பாவ, புண்ணிய 
அளவுக்கேற்ப 
செதுக்கியிருக்கிறார்கள் 
சொர்க்க, நரக கதவுகளை! 

அவள் 
மனச்சிறையின் கதவிற்குள் 
தன்னைத்தானே அடைத்துக்கொண்டு 
கடவுகோள் தேடியே 
காலம் தொலைக்கிறான்
அவன்! 

சாமானியன் நுழைய முடியாதவை 
அலங்கரிக்கப்பட்ட அரசாங்க கதவுகள் !
நாணயத்தில் செய்ததாலேயே 
நாணயம் இழந்தவை!

வியர்த்து,
விறைத்து, 
நனைந்து,
முக்காலமும் உணர்ந்த 
முனிவர்க்கும் மனிதர்க்கும் 
கண்ணில் பட்டதில்லை 
காலக்கதவுகள்! 

விற்கப்படாத கதவின்  
விலையை நிர்ணயிக்கும்
தச்சனின் மனநிலையோடு,
இக்கவிதையை விமர்சிக்க... 
வாசகன் தேடுகிறேன் 
என் தளத்தின் கதவுகள் 
உடைத்தெறிந்து!!!

Wednesday 4 January 2012

இக்கணமே!

சுகிக்க  படாத
சுகங்களில்தான்
தொக்கி  நிற்கிறது  வாழ்க்கை!

நிற்கும்  இடம்  தவிர 
திக்கெல்லாம்  பச்சை,
தீண்டாத  எல்லைகளை 
தீண்டுவதே  நம்  இச்சை!

வலிக்காதவரை
கவனம்  இழந்தது
எண்சாண்  உடலின்  உறுப்பு...
நரைக்காதவரை
அர்த்தம்  இழந்தது
கடந்த  நிமிடத்தின்  சிறப்பு...

இறந்தகாலம்  இருண்டதெல்லாம்,
எதிர்காலத்திற்கு 
வண்ணம்  சேர்க்க...
நிகழ்காலத்தை  கு(லை)ழைப்பதால்தான் .

இந்த கணமே யோசிப்போம்
அடுத்தடுத்த கணங்களை நேசிப்போம்
புன்னகையே சுவாசமாய் சுவாசிப்போம் 
வாழ்க்கையை கவிதையாய் வாசிப்போம்

சுகிக்க  படாத
சுகங்களில்,
தொக்கி  நிற்க்காதினி  வாழ்க்கை!

யான் விரும்பும் தனிமை!
ஒளிஓவியம் முடிந்தாயிற்று...
திரையரங்கம் இருண்டாயிற்று...
கதாபாத்திரங்களோடு சேர்த்து 
மனிதர்களும் மறைந்தாயிற்று... 
வெற்று நாற்காலிகளிடம்
துவங்குகிறது எனக்கான பாடம்! 


உபயம் : சுகுமார் 

Tuesday 3 January 2012

புலம்பெயர்தல்!

மருந்திட மறந்திட்ட 
மனக்காயங்களின்,
எரிச்சலை விட, 

என்னையே 
சுமையாக்கி விட்ட 
வாழ்க்கையின் 
பாரத்தை விடவும், 

தினம் தினம்
முளைத்து, தூர்ந்துவிடும்
கேள்விகளின் 
கணத்தை காட்டிலும்...

முதல் துளி கண்ணீர்
தந்தது, 

புகலிடம்
தேடிக்கொள்ள  சொல்லி,
என் புடனியில்  விழுந்த  அடிகள்!!! 

Sunday 1 January 2012

காலிக்கோப்பை!கவிழ்க்கப்பட்ட
கோப்பையிலிருந்து வழியும்
கடைசி துளிகளாய் ,
வார்த்தைகளை சிந்திவிட்டு...
மௌனக்குவளையை தேடுகிறேன்,
கோப்பையை நிறைக்க!