Wednesday 1 July, 2009

இருளும், இருள் சார்ந்த எண்ணங்களும்....




இருட்டு கறுப்பை குறிப்பதாய் தெரிவதில்லை. இருள் நிறத்தோடு ஒப்பிட முடியாததாய் தனித்து நிற்கிறது. மங்கலான வெவ்வேறு நிற வெளிச்சங்கலோடும் இருட்டு முகம் காட்டுகின்றது.என்னதான் வெளிச்சம் இருட்டுக்கொரு விடையாய் வந்தாலும், மௌனம் பேசும் இருட்டு எந்த கேள்வியையும் கேட்டதை தெரியவில்லை.

சிறு வயதில், இருள் பயத்தை தவிர வேறு எதையும் பெரிதாய் தந்ததில்லை. அனால் இப்போது இருட்டு எண்ணங்களை வாரி வாரி வழங்கும் அட்சயபாத்திரமாய் படுகிறது. மெழுகுவர்த்தி துணையோடு மௌனம் பேசி அழுது உருகி கிடப்பது எனக்கு பிடித்த விசயமாய் ஆனாலும், அந்த வெளிச்சமும் தீர்ந்த பின் கிடைக்கும் சூன்யம் இன்னும் அலாதி இன்பம் தருகிறது.எல்லாம் இருண்டு போன, கனத்த மன ஓட்டங்களின் அலசலில்தான் "சுயம்" தட்டுப்படுகிறது.இப்படி அகத்தை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு, புறத்தை இருட்டிக்கொள்கிறது இருள்.

இருட்டிற்கென்று எப்படி முகம் கிடையாதோ, அதே போல் இருட்டில் உங்களுக்கும் முகம் கிடையாது. இருட்டை தனிமையில் ரசிப்பதும், துணையோடு ரசிப்பதும், கூட்டத்தோடு ரசிப்பதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனிமையிலும், துணையுடனும் ரசிக்கும் இருட்டின் அழகை "நிசப்தம்" அலங்கரிக்கிறது. கூட்டத்தோடு நோக்கும்போது "சத்தம்" அழகு சேர்க்கிறது. குரல்கள் முகங்களை மாறும் வித்யாசமான நேரம் அது.

இருட்டிற்கென எல்லைகள் இல்லாமல் போனாலும், வெளிச்சத்தின் துவக்கத்தில் முடிந்து போகிறது இருள். இருட்டு மின்சாரம் சார்ந்ததாய் உணரப்பட்டாலும், இருள் நிரந்தரமானது. இயற்க்கை சார்ந்த நாட்களும், நாட்கள் சார்ந்த இரவுகளும், இரவுகள் சார்ந்த இருளும் நிரந்தரமானது. பகல் நேரங்களில் கூட மூடிக்கிடக்கும் பெட்டிகள் துவங்கி அறியாமை சூழ்ந்த மனங்கள் வரை, இருள் நிரந்தரமாய் அடைகாக்கபடுகிறது.



இருட்டில் எனக்கு பரிச்சயமான முகங்களை மனத்திரையில் ஓடவிட்டு பார்ப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஒரே முகத்தின் பல பாவனைகளை இருட்டு திரையிட்டு காட்டும். சிறு வயதில் இருந்தே பற்பல முறை இருட்டும், இருட்டில் உணரப்பட்ட இயலாமையும் தவிர வெரேதும்... பார்வையற்றோரை பற்றிய எண்ணங்களை எழுப்பியதில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருள் வெளிச்சத்தை தாண்டிய ஆழமான எண்ணங்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. "தாகம் தீர்ந்த பின் யாரு தண்ணிரை பற்றி நினைப்பதில்லை". வெளிச்சம் கொடுக்கும் சுதந்திரம் எண்ணங்களை கட்டிப்போட்டு விடுகிறது.

இருட்டு மௌனத்தை குறிக்கிறது. குரல்களில் அடையாளம் தேடுகிறது. அறியாமையின் பிரதிபலிப்பாயும், இயலாமையின் எடுத்துக்காட்டையும் இருக்கிறது.வெளிச்சம் இலேசானதாகவும், இருள் எடை கூடியும் உணரப்படுகிறது.இருட்டு உன் பிரிவையும், பிரிவின் வலியையும் கூட குறிக்கிறது. இப்போதெல்லாம் வெளிச்சத்தை விட இருளுக்காய் மனம் ஏங்குகிறது.

No comments:

Post a Comment