ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Tuesday, 8 December 2009
சொக்கா... ஆயிரம் பொன்னாச்சே!!!
கைப்பேசியை(யும்) அணைத்தாயிற்று
பதினோராம் கோளொன்றில்
பாய் போட்டமர்ந்துவிட்ட தனிமை - இந்த
கவிதைக்காக.
ரசனையான புணர்தலை சாப்பிட்டு
கற்பழிப்பின் வலியை துப்புகிறது
போட்டிபோட்டு எழுதும் இயல்பிலாக் கவிதை.
சட்டென்று காலியாக்கப் பட்டிருக்கிறது
எப்போதும் நிறைந்திருக்கும் அட்சயக் குடமொன்று.
கசிந்து கொண்டேயிருக்கிறது வெறுமை
காகிதம் முழுதும்.
எந்த வார்த்தை எடுத்தடைக்க? - என்ற யோசனையில்
மூழ்கிப் போய்விட்டேன் நான்.
எப்போதும் கொஞ்சி கிடந்த என் மொழி
கெஞ்சிய பின்னும் பாராமுகம் காட்டுகிறது
அப்படியே அவளை போல!
சிந்தனை தூண்டிலில்
செருகப்பட்டிருக்கிறது காலப்புழுக்கள்.
நாள் முழுதும் காத்திருந்தும்
காலிக் கூடையுடன்தான் திரும்புகிறேன் வீட்டிற்கு.
ஒரு நினைவின் மூலத்தை
திருடிக் கொண்டோடிய மற்றொன்று
உலர்ந்தே போய்விட்டது
அடுத்து வந்த சூன்ய கணத்தின் சூட்டில்!
காலமும் மூளையும்
வெடிப்புகளிட்டு வானம் பார்க்க,
பேனா மையும் வரண்டுவிட்டது...
எதுவும் எழுதாமலே.
எப்போதும் எழுதித் தீர்க்கும்
எல்லாக் கருவையும் கலைத்துப் போட்டு
அவள் நினைவுகளில் கூட,
ஆசுவாசிக்க அமராமல்...
பரிசுத்தொகை பதினைந்து நூறுகளில்
முட்டி மோதி மூர்ச்சையாகிப் போனதென் முயற்சி !!!
(உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக)
Subscribe to:
Posts (Atom)