Thursday 8 October, 2009

நீங்களே சொல்லுங்க...


விவாதங்கள் அழகானவை... "நான்" என்ற அகந்தை கொஞ்சம், இறந்த காலம் கொடுத்த "அறிவு" கொஞ்சம்,... எல்லாம் தாண்டி நம் வார்த்தைகளில் கவனம் குவிக்கும் செவிகள் கிடைத்த உற்சாகத்தில், விவா.....திப்பது இயல்பாகவே அலாதியானது.சாதாரண வார்த்தைகளை விட, "விவாதங்களின்" வார்த்தைகள், காற்றலைகளில் சற்று அதிகமாகவே அதிர்வினை ஏற்ப்படுத்துகின்றன. 

 சில வாரங்களுக்கு முன்  ஆனந்த விகடனில் வெளியான, ஒன்,டூ,த்ரீ... என்ற கவிதையினை (நண்பர் கிருஷ்ண குமார் எழுதியது) ரசித்துவிட்டு சுகுமாரையும் வாசிக்க சொன்னேன். கவிதையை வாசித்த மாத்திரமே சலனமே இல்லாமல் கேட்டான், "என்ன இருக்கு இந்த்த கவிதையில்?" என்று. என்ன இருக்கணும் ? என்று கேட்டேன் நான்.

 "கேள்வி கேட்டா சொல்லணும், திருப்பி கேள்வியே கேட்க கூடாது" என்றான். பதில் தெரிஞ்சுகிட்டே கேள்வி கேட்டா?, இதற்கான பதில் உனக்கே தெரியும் -னு தெரிய வைக்கிறதுக்காகத்தான் பதில் கேள்வி என்று சொல்லி... அந்த கவிதை, "உணர்வை தொடுவதாய்" இருப்பதை சொன்னேன். தொடர்ந்த வார்த்தை பரிமாறல்களுக்கு பிறகு, கடைசியாய்.... "கவிதை என்றால் செய்தி இருக்கணும்" என்றான். அதோடு நிறுத்தாமல் கவிதை என்ற பெயரில் நான் எழுதும் பதிப்புகளில் "புலம்பல்தான்" இருப்பதாய் சொன்னான்.

அவனுடைய பார்வையில் என் புலம்பல்கள், கவிதையாய் தெரியாததாய் சொன்னான்(நான் எதை எழுதினாலும், வேறு வழியின்றி படிக்கும் முதல் வாசகன் ).அவனிடம் இருந்தது நான் படிப்பதற்காய் வாங்கியிருந்த "பெயல் மணக்கும் பொழுது " - ஐ (பெயல் மணக்கும் பொழுது - ஈழப் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு) சுட்டிக் காட்டி, அவைகளும் புலம்பல் தானே என்றேன். "அந்த புலம்பல் வேற, உன் புலம்பல் வேற" என்றான். அதெப்படி வெவ்வேறாகும் என்று கேட்டதற்கு... அவர்களின் எழுத்துகள் அடுத்த மனிதர்களின் வலியை பேசுவதையும், எனது எழுத்து முற்றிலுமான "சுய" புலம்பல் என்பதையும் சொல்லி முடித்தான்.

இதற்கு முன்பே ஒரு முறை, "வலியின் பிடியினில்தான் நல்ல படைப்புகள் நல்ல படைப்புகள் தோன்றும்" என்று நானும்... "வலியில் இருக்கும் போது படைப்புகள் வராதென்று" சுகுமாரும் பேசியிருந்ததிலேயே மீண்டும் வந்து நின்றோம்.இந்த முறை அவனது வாதம் இன்னும் அழுத்தமாய் விழுந்தது.

 " எதையாவது எழுதீட்டு வலியில் எழுதுனேன் னு சொல்றதும், எழுதவே முடியாத அளவுக்கு வலில இருக்குறதும் வேற" னு சொன்னான். அதை அதிகமாகவே ரசித்தாலும்.... விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.....




நீங்க சொல்லுங்க ....
ஒரு கவிதையில் என்ன இருக்கணும் ?


வலியின் பிடியினில்தான் நல்ல படைப்புகள் தோன்றும்" என்று நானும்... "வலியில் இருக்கும் போது படைப்புகள் வராதென்று" சுகுமாரும் கூறுவதில்

உங்கள் கருத்து என்ன ?

3 comments:

  1. வலியில் இருந்துதான் படைப்புகள் வரவேண்டும் என்பதில்லை. படைப்புகள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அது காதல்,கோபம், வெறுப்பு, ஆற்றாமை, சுகம், துக்கம், வலி, இன்பம் போன்ற எவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

    அதே போல சுய புலம்பல்கள் கவிதையாய் இருக்கக்கூடாது என்பதும் உடன்பாடானது இல்லை. தன்னிலையில் இருந்து ஒரு சிறப்பான கவிதையை தராத கவிஞன் பிறன் நிலையிலிருந்து நல்ல படைப்பை தர முடியாது. சிலவற்றை துய்த்து பார்ப்பதில் இன்பம். சிலவற்றை தள்ளி நின்று பார்ப்பதில் இன்பம். அவ்வளவுதான்

    ReplyDelete
  2. தரன் முதலில் நன்றி பெயர் மாற்றியிருக்கிறீர்கள்.
    நல்லாயிருக்கு.கீழே உங்கள் பெயரைக் கொண்டு வாருங்கள்.அழகு.
    இனி மேலே தமிழ்நாடான் சொன்னதை நானும் வரவேற்கிறேன்.என் கவிதைகளயும் நிறைய விமர்சனங்கள் எப்போதுமே நிறைந்த சோகம்ன்னு.மனதின் வலியோ சோகமோ சந்தோஷமோ அதுதான் முதலில் இயல்பான வெளிப்பாடாக இருக்கும்.அடுத்தவர்கள் எதையோ சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.நீங்கள் முன்னேறிக்கொண்டிருங்கள்.எழுத்தில் எண்ணங்களைக் கொட்டுவதால் மனதின் பாரங்களும் இலேசாகின்றன.சுகுமார் உங்கள் படைப்புகளுக்கு ஊக்கம் தருகிறார் என்று நினைக்கிறேன்.இயல் அனுபவம் அவருக்கு என்னவாக இருக்குமோ அவர் அதைத்தான் நினைத்துக்கொள்வார்.அதால்தான் அவர் எண்ணம் அப்படியாயிருக்கிறது.நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  3. கவிதைல எல்லாமே இருக்கலாம் எதுவுமே இல்லாமலும் இருக்கலாம் ....
    கவிதை எழத்து வடிவமா தான் இருக்கணும்னு அவசியமில்லையே (எதுகுவிங்கனு நினைக்கிறன் )...
    பல கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் சொல்ற போல புன்னகை , வெறுமை, தனிமை,இனிமை இன்னும் பல எல்லாமே கவிதையா பார்க்க முடியும்.....
    கவிதைல ரசனை இர்ருக்கணும் கவிஞன்தும் ரசிகன்தும்
    கவிதை எத வேணா பிரதிபலிக்கலாம் இது மட்டும்னு வரையறுக்க முடியாது...
    வலியில் உருக்கமான கவிதை பிறக்கும்...
    தேளிவு கிடைக்கும் அனால் கவிதையே வராது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.......

    ReplyDelete