Monday, 1 November 2010

சுயம் - I



எத்தனை முறை ஆய்ந்தாலும், இந்த சுயம் பற்றிய தெளிவு எட்டாததாகவே இருக்கிறது. கடந்து போகும் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கேயான கண்ணீரையும், சிரிப்பையும் தன சட்டைப்பை வழிய எடுத்துக்கொண்டே திரிகிறான், முகத்தில் பரபரப்பை காட்டிக்கொண்டு. வாழ்க்கை இங்கே எளிதாகவே இல்லை (அ) எளிதாகவே பார்க்கப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.

இங்கேதான் வாழ்க்கையை இரண்டு வகையில் பிரித்து ஆராய தோன்றுகிறது. அகம், புறம். எளிதான புரிதலுக்காய் , புறம் - பணம், வேலை, படிப்பு, அந்தஸ்து, படோடோபம், அரசியல், அறிவியல் என்றும்... அகம் - நட்பு, காதல், உறவு, சுய மதிப்பீடு, ஒப்பீடு, ரசனை, குணம் என்றும் அலசப்படுகிறது.

அகவாழ்க்கை, புற வாழ்க்கை இரண்டிலுமே அடுத்தவர்கள் கண்களை மனதில் கொண்டே, மாற்றங்கள் வருகிறது. தனக்கான ரசனை, தனக்கான மனநிலை, தனக்கான வாழ்க்கை முறை எல்லாம் மாறி, எல்லாமே எதோ ஒன்றை சார்ந்ததாய் மாறிக் கிடக்கிறது. நீங்கள் உடுக்கும் உடை தொடங்கி, நீங்கள் கேட்கும் இசை வரை, உங்கள் ரசனை கூட மற்றவரின் ரசனையோடு சார்ந்து சுயமிழந்து போகிறது. 

குறிப்பிட்ட நிலை வரைதான், எதோ ஒன்றை சார்ந்து வாழ்வது சரியானதாய் படலாம். தனியாய் வாழப் பக்குவம் வரும் நிலையில், சார்தல் நிறுத்தப் பட வேண்டும். Discovery சேனலில் காட்டப்படும் விலங்குகளின் வாழ்க்கை முறை கூட, இதை சரியென்று நிருபிக்கிறது. இந்தப் புள்ளியில் நமக்கான கருத்து வேறுபாடு துவங்கலாம். "யாரோ ஒருவரை, ஏதோ ஒன்றை சார்ந்துதான் கடைசிவரை இருக்க வேண்டும்" என நீங்கள் உரக்கச்சொல்வது கேட்கிறது. 

"THE BUCKET LIST " என்ற திரைப்படத்தை தங்களில் பலர் பார்த்திருக்கலாம். இரண்டு முதியவர்கள், தங்கள் வாழ்க்கையின் கடைசி நாட்களில்,  தங்கள் ஆசைகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாய் அதை நிறைவேற்றுவார்கள்.  உங்கள் ஒவ்வொருவருக்குமே அதே போன்ற ஒரு " BUCKET LISt "  இருக்கலாம். அதை நிறைவேற்ற நீங்கள் மரண நாட்கள் வரை காத்திருக்க தேவையில்லை. உங்கள் வாழ்நாட்களை, நீங்கள் வாழ்ந்து பார்க்கவும் உபயோகிக்கலாம். 

நாம் செய்வதெல்லாம்,
நமக்காக வாழ்க்கையை தொலைத்த பெற்றோரை சார்ந்தும், நம்மை பார்த்துக்கொள்ள தம் வாழ்க்கையை தொலைக்கப் போகும் நம் பிள்ளைகளை சார்ந்துமே தொடர்கிறது. "இது இந்தியக் கலாச்சாரம்"; சரி. இதுதான் உன்னதமும் பாதுகாப்பானதுமான வாழ்க்கை முறை"; மிகச்சரி. ஆனால், உண்மையாக நீங்கள் நீங்களாய்... வாழ்கிறீர்களா? மற்றுமொரு கருத்து வேறுபாடு. 

காந்தி, சே குவேரா, சந்திர போஸ், பிரபாகரன்- இவர்களின் புறவாழ்க்கை நமக்கு ஓரளவு தெரியும். ஆனால், அகம்? 

சே குவேராவுக்கு என்ன மாதிரி உணவுப்பழக்கம் பிடித்திருக்கும்? ஒரு போராளி இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டிருக்க முடியுமா? 

பிரபாகரன் சிங்கள ராணுவம் சூழ்ந்திருக்கும் போது, தனக்கு பிடித்தமான பாடலை முனுமுனுத்திருப்பாரா? தன் நட்புகள், உறவுகளின் நினைவுகளில் ஆழ்ந்திருப்பார?  

காந்தி நாட்டிற்காய் போராட முடிவெடுத்த போது, அவருடைய அகம் என்ன யோசித்திருக்கும்? 

...  சரி, சரி . டீம் லீடருக்கு ரிப்போர்ட் அனுப்பனும். இதற்க்கு மேல் எழுதிக்கொண்டு இருந்தால் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியாது. பேருந்து நெரிசலை நினைத்தாலே மூச்சு முட்டுகிறது. மீண்டும் பார்க்கலாம்.